நெய்வேலியில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை

நெய்வேலி: நெய்வேலியில் பலா, முந்திரி விவசாயிகள் மற்றும் பெருமாள் ஏரி பாசன விவசாய சங்கத்தினருடன், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

நெய்வேலி வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு, முத்தாண்டிக்குப்பத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெய்வேலி விருந்தினர் மாளிகை வந்த பழனிச்சாமி, பலா, முந்திரி விவசாயிகள் மற்றும் பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.

பெருமாள் ஏரியை மீண்டும் முழுவதுமாக துார்வார வேண்டும். பலா விற்பனைக்கு மார்க்கெட் வசதி செய்து தரவேண்டும். ஜூன் மற்றும் ஜூலையில் பலா சாகுபடி அதிகமாக இருக்கும். பலாவை மதிப்புக்கூட்டு செய்ய சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மருத்துவ குணம் கொண்ட பலா தொடர்பாகவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களின் பாட நுால்களில் பதிவிட வேண்டும் என பலா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை கேட்டறிந்த பின் பழனிச்சாமி பேசியதாவது; அ.தி.மு.க., ஆட்சியில் நீர் மேலாண்மை குழு நியமித்து, மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாக கூடாது என குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தேன். பெருமாள் ஏரி 119 கோடி மதிப்பில் துார் வாரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் வந்து அது முறையாக நடைபெறவில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவோம். துார்வாருவதில் முறைகேடு நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கையும் இருக்கும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறினார்.

Advertisement