உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைக்கலாம் என்று அ.தி.மு.க., முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி விவரம்;
தேர்தல் வரும்போது தான் ஸ்டாலினுக்கு மக்களே கண்ணுக்கு தெரிவாங்க. அதன் டைட்டிலே(உங்களுடன் ஸ்டாலின்) மாத்தி இருக்கலாம். என்னை கேட்டால் உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கலாம்.
ஏன் என்றால் தமிழக அரசின் இலச்சினையான வாய்மையே வெல்லும் போய், பொய்மையே வெல்லும் என்பதாக மாறிவிட்டது. மனுக்கள் வாங்குகிறார் ஸ்டாலின். நான் அவரிடம் கேட்கிறேன், கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?
2021 தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு தொகுதியாக போனீங்க. என்ன சொன்னீர்கள், இங்கே ஒரு பெட்டி இருக்கு.மனுக்களை அதில் போடுங்க. இதோ பாருங்க என் கையில் இருக்கிறது பேனா இல்லை (தம் பாக்கெட்டில் இருக்கும் பேனாவை கையில் எடுத்துக்காட்டி பேசுகிறார்) சாவி. முதல்வரான உடன் இதை நானே திறப்பேன். அதில் உள்ள மனுக்களை நானே படிப்பேன். நானே நடவடிக்கை எடுப்பேன்.
எத்தனை மனு வந்தது, எத்தனை நடவடிக்கை எடுத்தீங்க? எத்தனை பேரின் குறைகளை தீர்த்து வைத்தீங்க? ஒண்ணும் இல்லை... இன்னொரு பொய் சொன்னார். என்ன சொன்னார்... நேரா கோட்டைக்கு வரலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டாங்க. என் ரூமுக்கு நேராக வரலாம், உங்க குறையை சொல்லலாம் என்று சொன்னீங்க?
கோட்டைக்கு பொதுமக்கள் வந்து ஸ்டாலினை சந்திச்ச வரலாறு உண்டா? யாராவது சந்திச்சு இருக்கீங்களா? வாங்கின மனுக்களுக்கு தீர்வு கிடையாது. அதிகாரிகளையும் சந்திக்க முடியாது. 6 மாதத்தில் தேர்தல் வருது. முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற அதிகாரிகள் இருக்காங்க இல்ல, அவங்க புதுசு புதுசா பேர் சொல்றது.. அதில் ஒண்ணும் குறையில்லை.
இப்போ என்ன பண்றீங்க.. உங்களுடன் ஸ்டாலின் அப்படின்னு மக்கள்கிட்ட போய் நிற்பது. பொய்களுடன் ஸ்டாலின் என்று அதற்கு சொல்வது தான் உண்மையான பேராக இருக்கும். இந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு போய்விட்டது, கஞ்சா,கட்டப்பஞ்சாயத்து, அதுமட்டும் இல்லாமல் 24க்கும் மேற்பட்ட லாக்அப் மரணங்கள் நடந்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடக்கலை. 2 பேரின் ஆட்சி தான் நடக்கிறது... ஒண்ணு போலீஸ் ஆட்சி, மற்றொன்று அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது.
மின் கட்டணத்தை உயர்த்தியாச்சு, மாதாந்திர மின் கணக்கீடு கிடையாது. கேஸ் சிலிண்டருக்கு விலை குறைக்கல, ஆனா இப்போது புதிய டைட்டிலுடன் உங்களுடன் ஸ்டாலின் அல்ல... பொய்களுடன் ஸ்டாலின் என்று வைக்கலாம். இங்கு மக்களாட்சி கிடையாது, அதிகாரிகள் ஆட்சி தான்.
பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள் அமைத்தால் கல்வி வளர்ந்து விடுமா? 3600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 65000 ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.
வகுப்பறைகளில் எந்த வசதியும் கிடையாது. நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். நான் படிச்சு பர்ஸ்ட் கிளாசில் தேர்ச்சி பெறவில்லையா? கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்றால் படிக்க மாட்டார்களா? அது என்ன கான்செப்ட்?
இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.


மேலும்
-
போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா
-
குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தணும்: சீமான்
-
கல்லுாரி மாணவிக்கு பாலியல் மிரட்டல்: பெங்களூருவில் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
-
210 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்: இபிஎஸ்
-
பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்: நாடகக் குழுவினருக்கு குவிகிறது பாராட்டு