லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா

காத்மாண்டு: கோடிக்கணக்கில் லஞ்ச பேரம் பேசிய ஆடியோ கசிந்ததால், நேபாள அமைச்சர் ராஜ்குமார் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார்.


அமைச்சர் ராஜ்குமார் குப்தா, வேலை நியமனம் மற்றும் நிலம் தொடர்பாக சாதகமான முடிவெடுப்பதற்கு, பல கோடிகள் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் ஆடியோ கசிந்து நேபாள அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரண்டு பைகள் உடைய லஞ்சப் பணத்தின் புகைப்படங்களுடன் அதிகார துஷ்பிரயோக விசாரணை ஆணையத்தில் (சி.ஐ.ஏ.ஏ.,) புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விவகாரம் நாட்டில் ஊழலை எதிர்க்க, நேபாள அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்த ஊழல் பிரதமர் கே.பி. சர்மா ஒலியையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜ்குமார் குப்தாவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். ஆனால் பிரதமர் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜ்குமார் குப்தா தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ராஜினாமா குறித்து பேஸ்புக் சமூகவலைதளத்தில் ராஜ்குமார் குப்தா பதிவிட்டுள்ளதாவது:

கடந்த சில நாட்களாக, லஞ்ச ஒப்பந்தங்கள் தொடர்பாக, தொடர்ந்து எனது பெயர் அடிபடுவது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விவகாரத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையில் நான் பலியாகிவிட்டேன் என்று தோன்றுகிறது. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்து, உண்மையை வெளிப்படுத்தவேண்டும் அந்த அடிப்படையில், நான் எனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை பிரதமர் சர்மா ஒலி இடம் நான் அளித்துள்ளேன்.

இவ்வாறு ராஜ்குமார் குப்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement