சினிமா காட்சியை பார்த்து ஒரே நாளில் கல்வித்துறை உத்தரவிடலாமா: 'ப' வடிவ இருக்கை சாத்தியமில்லை என மெட்ரிக் பள்ளிகள் போர்க்கொடி

மதுரை: 'மலையாள சினிமாவில் இடம் பெற்ற கற்பனை காட்சியை பார்த்து பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. இதில் மாணவர்கள் நலனுக்கு எதிரான விஷயங்களே அதிகம் உள்ளன. நிர்வாக ரீதியாகவும் இது சவாலானது. இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' என தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பு (பெப்சா) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 'பெப்சா' மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:



தமிழகத்தில் பல ஆண்டுகளாக பள்ளி வகுப்பறை என்றால் இப்படி தான் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆசிரியர்- மாணவர் விகிதம் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு வகுப்பறை என்பது 20க்கு20 என்ற அளவில் இருக்க வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை அமர வைக்க முடியும். அரசு பள்ளிகளில் ஏற்கனவே வகுப்பறைகள் பற்றாக்குறை உள்ளன. பல பழைய வகுப்பறைகள் இடிக்கப்படும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் முன் இருக்கை, கடைசி இருக்கை என்ற ஏற்றத்தாழ்வை போக்கும் வகையில் மலையாள சினிமா ஒன்றில் இடம் பெற்ற காட்சியை பின்பற்றி தமிழகத்திலும் 'ப' வடிவ இருக்கைகள் அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியம். ஒரு நடைமுறையை மாற்றியமைக்கும் போது சாதக பாதகங்களை ஆய்வு செய்ய வேண்டாமா.

அரசின் புதிய உத்தரவுப்படி ஒரு வகுப்பறை 20க்கு20 என்ற அளவில் அமைக்க வேண்டும். அதில் 25 முதல் 30 மாணவர்கள் அமர முடியும். முகப்பு பகுதியில் 2 கதவுகள் இருக்க வேண்டும். கதவு பகுதியில் இருக்கை அமைக்க முடியாது. எனவே நிர்ணயித்த எண்ணிக்கையை விட மாணவர்கள் குறைவாகவே அமர முடியும். இந்த சூழலில் 'ப' வடிவ முறை சாத்தியமற்றது. அது 'ட' வடிவ முறையில் தான் பெரும்பாலும் அமையும். 'ப' வடிவ முறையால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும்.

'ப' வடிவ இருக்கை அமைப்புக்கு 3 பக்க கரும்பலகைகள் அமைக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் தலையை சுற்றாமல் கரும்பலகையை கவனிக்க முடியும். ஆனால் ஒரு ஆசிரியர் 3 கரும்பலகைகளிலும் எழுத முடியுமா. 'ப' வடிவ முறையால் கழுத்து, கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும். சினிமாவிற்கு வேண்டுமானால் இந்த நடைமுறை ரசிக்கும்படி இருக்கும். நடைமுறைக்கு சாத்தியம் இருக்காது. அனைத்து கட்டமைப்பும் கொண்ட மெட்ரிக் பள்ளிகளிலேயே இதை செயல்படுத்த முடியாது. கட்டமைப்புகள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளுக்கு எவ்வாறு சாத்தியம்.

எனவே மாணவர்கள் நலன் கருதி வழக்கத்திற்கு மாற்றமாக இருக்கைகள் மாற்றப்படுவதற்கு முன் ஆசிரியர்கள், பெற்றோர் - டாக்டர்கள், மனநல ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து கருத்து கேட்க வேண்டும். அதுவரை இந்த உத்தரவை கல்வித்துறை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

Advertisement