டில்லி அணியின் எந்த திட்டமும் இங்கு பலிக்காது; சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

78


கடலூர்: தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டில்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

''உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில், இன்று முதல்வர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மக்களிடம் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.


உங்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். இன்று துவங்கி நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன.



நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இன்று துவங்கி ஆகஸ்ட் 15 வரை, முதற்கட்டமாக 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 1,428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்களும் நடக்க உள்ளன.

பிரத்யேக இணையதளம்..!



'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் முகாம் நடைபெற உள்ள இடத்தின் விவரங்களை அறிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.



சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காமராஜர் பிறந்தநாளில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் காரணமாக அரசு மேல் நம்பிக்கை வைத்து இன்னும் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பல லட்சம் மனுக்கள்



மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், முகாமில் விண்ணப்பம் கொடுத்தால் போதும் நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் திட்டத்தின் நோக்கம்.
தமிழகம் ஓரணியில் இருக்கும் போது எந்த டில்லியின் அணியின் காவி திட்டமும் இங்கே பலிக்காது.

லிஸ்ட் பெரியது



உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கும் மகளிருக்கு, நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். லிஸ்ட் பெருசா இருக்கு.சொல்ல நேரம்தான் இல்லை. ஆனால் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். தமிழகம் வரலாற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த திட்டங்கள் மட்டும் போதுமா என்றால் கேட்டால் போதாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement