பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை: 'மும்பை பங்குச் சந்தையில் 4 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது, மதியம் 3 மணிக்கு வெடிக்கும்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது.


புதுடில்லில் 2 கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. துவாரகாவில் உள்ள ஒரு பள்ளி, தனியார் கல்லூரி ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்தினர் போலீசின் உதவியை நாடினர். உள்ளூர் போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்துக்கே சென்று விசாரணை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது.


பல கட்ட சோதனைகளின் முடிவில் அது வெறும் மிரட்டல், குண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தைக்கு ஒரு இ மெயில் வந்தது. இந்த மெயிலானது கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயரில் வந்தது.


அதில், மும்பை பங்குச்சந்தையில் 4 ஆர்டிஎக்ஸ் ரக வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், உடனடியாக போலீசின் உதவியை நாடினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.


இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பினராயில் விஜயன் பெயரிலான அந்த இ மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்றும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement