ஓம் நமசிவாய டி.வி.,தொடரை இயக்கிய தீரஜ் குமார் மரணம்

1

மும்பை: நடிகரும் டி.வி., தொடர் இயக்குநருமான தீரஜ் குமார் 79, இன்று மும்பையில் காலமானார்.

பாலிவுட் நடிகர் மனோஜ் குமாரின் மறைவைத் தொடர்ந்து மற்றொரு பிரபலம் தீரஜ் குமார் மறைவு செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீரஜ் குமார், பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தார். அவர் நேற்று முன்தினம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார்.

1970 ஆம் ஆண்டு வெளியான ராத்தன் கா ராஜா திரைப்படத்தில் தொடங்கி பல இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து ரோட்டி கபடடா அவுர் மகான் (1974), சர்கம் (1979) மற்றும் கிராந்தி (1981) போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

இவர் இயக்கிய'ஓம் நமசிவாய' (1997-2001) மிகவும் பிரபலமானது. இந்த தொடர் டி.டி நேஷனலில் ஒளிபரப்பப்பட்டு, புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement