பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்

13

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இன்றைய அறிவியல் காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறது. அப்படி முறையாக இல்லாத இடத்தில் விபத்துக்களைத் தவிர்க்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்றும் வசதியும் இருக்கிறது. குறைந்தபட்சம் மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் ஆகியவையாவது வைத்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் காட்சிகள் படப்பிடிப்பு நடக்கும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள், அவசர பாதுகாப்புக் குழுவினர், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழு ஆகியவற்றை வைத்து நடத்துவதில்லை என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த 'சர்தார் 2' சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது ஏழுமலை என்ற ஸ்டன்ட் கலைஞர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து அகால மரணமடைந்தார். அப்போதே ஸ்டன்ட் காட்சிகளின் படப்பிடிப்பின் போது முறையான பாதுகாப்பு வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று திரையுலகிலும், சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் எழுப்பினார்கள். ஆனால், அது நடந்த நான்கு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு விபத்து, மீண்டும் ஒரு ஸ்டன்ட் நடிகர் அகால மரணமடைந்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தின் ஸ்டன்ட் காட்சி படப்பிடிப்பில் மோகன்ராஜ் என்ற ஸ்டன்ட் நடிகர் அகால மரணமடைந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்படப்பிடிப்பில் முறையான பாதுகாப்பு வைத்து நடத்தினார்களா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.

Latest Tamil News

'சர்தார் 2, வேட்டுவம்' ஆகிய படப்பிடிப்புகளில் ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் அடைந்துள்ளது ஸ்டன்ட் கலைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கதாநாயகர்களுக்கு 200 கோடிக்கும் மேல் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்புகளில் முறையான பாதுகாப்பு வைத்தும், மருத்துவக்குழு வைத்தும் படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று பலரும் குமுறுகிறார்கள்.

மரணமடைபவர்களுக்கு சில லட்சம் நிவாரண நிதி என தயாரிப்பாளரோ, நடிகரோ கொடுத்துவிட்டு அத்துடன் அவர்களது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் மனக்கஷ்டத்திற்கு யாருமே ஆறுதல் சொல்ல முடியாது. இனி வரும் காலங்களில் இப்படியான விபத்துகள் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும் அல்லது அரசு தலையிட வேண்டும் என ஸ்டன்ட் கலைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதனிடையே நாகை மாவட்டம், விழுந்தமாவடி ஊரில் நடந்த படப்பிடிப்புக்கு மூன்று நாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். நான்காவது நாளில் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement