குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்: முதல்வருக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: 20 ஆண்டுகளாக, தீர்வு இல்லாமல் போராடும் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் முழுவதும், மாநகரங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்கப் பெறாமல், அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.
கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவது கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை, ஆண்டாண்டு காலமாகத் தூக்கத்தில் இருக்கிறது. பல ஆண்டு காலமாக, குடி நீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு, ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக, அதில் பாதியளவே ஊழியர்களுக்கு, கையில் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
இ.எஸ்.ஐ.,,இது தவிர, இந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ளதன்படி, இ.பி.எப்., உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கானஅடையாள அட்டை சீட்டுவழங்கப்படவில்லை.
குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பாரதிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, பலமுறை தமிழக அரசு, அமைச்சர்கள், 2 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அமைச்சகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் என அனைத்துத் தரப்பிலும் கோரிக்கை எழுப்பியும், இன்னும் தீர்வு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதும் ஆகும். அத்தோடு மட்டுமல்லாமல், 75,000 க்கும் மேற்பட்ட பணப் பறிமாற்ற நடவடிக்கைகள், வங்கிக் கணக்கின் மூலமே நடைபெற வேண்டும் என்ற அரசாணையும் பின்பற்றப்படுவதில்லை.
அனைத்திற்கும் மேலாக, இந்த அனைத்து விதிகளையும் பின்பற்றுவோம் என்று ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்ததாரர்கள், இவை எதையும் பின்பற்றாமல் இருப்பது, ஒப்பந்த மீறல் மட்டுமின்றி, அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்வதற்கும் போதுமான முகாந்திரம் இருப்பதாகும்.
இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.