ரஷ்யாவில் இந்திய உத்சவ் விழா: 8.5 லட்சம் பேர் பங்கேற்பு

1

மாஸ்கோ: மாஸ்கோவில் 9 நாட்கள் நடைபெற்ற இந்திய உத்சவ் விழா, ரஷ்யாவில் இந்திய கலாசாரத்தின் மீதான அன்பை பிரதிபலிக்கும் வகையில், 8.5 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்ததாக இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மையப்பகுதியில் இந்திய உத்சவ் விழா 9 நாட்கள் நடைபெற்றது. இந்த விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. மாஸ்கோ நகர நிர்வாகம் மற்றும் இந்திய மகளிர் சங்கத்துடன் இணைந்து இந்திய துாதரகம் இதற்கான ஏற்பாடு செய்தது.


விழாவுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து இந்திய துாதரகம் அறிக்கை:
விழாவில் 150க்கும் மேற்பட்ட இந்திய கலைஞர்கள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகங்களின் கலாசார குழுக்களின் தினசரி யோகா, தியானம் மற்றும் ஆன்மிக வகுப்புகள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய நடனங்கள் மற்றும் இசையைக் கற்றுக்கொண்ட 350க்கும் மேற்பட்ட உள்ளூர் ரஷ்ய கலைஞர்கள் விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

தாஜ்மஹால் மற்றும் இந்தியா கேட் போன்ற இந்திய அடையாளங்களின் பிரதிகள் மற்றும் பாரம்பரிய வண்ணமயமான அலங்காரங்களைக் கொண்ட புகைப்பட மண்டலங்கள் உட்பட 10 செயல்பாட்டு மண்டலங்களையும் பார்வையாளர்கள் ரசித்தனர்.

நிறைவு விழாவில் பேசிய நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீடித்த கலாசார பிணைப்புகள் மற்றும் அன்பான உறவுகளை விவரித்தார்.

ரஷ்ய கூட்டமைப்பிற்கான இந்திய தூதர் வினய் குமார் கூறுகையில்,ஏற்பாட்டாளர்கள், கலைஞர்கள், தன்னார்வலர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ரஷ்ய பார்வையாளர்களுக்கு அவர்களின் உற்சாகமான பங்கேற்புக்கு நன்றி.

இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உறுதியான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன, இது அத்தகைய கலாசார முயற்சிகள் மூலம் தொடர்ந்து ஆழமடைகிறது என்றார்.

இவ்வாறு இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement