பூமிக்கு திரும்பியது 'டிராகன்' விண்கலம்; சரித்திரம் படைத்தார் சுபான்ஷு சுக்லா

1

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்தில், 18 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் அடங்கிய குழுவினர், வெற்றிகரமாக நேற்று பூமிக்கு திரும்பினர்.


இதன் வாயிலாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.


Latest Tamil News

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து, இப்பணியை செய்தன.


இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர்.
Latest Tamil News

அவர்களை சுமந்து சென்ற, 'டிராகன்' விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குபின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இதன் வாயிலாக, ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றார்.


இதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழுவினர் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.


திட்டமிட்டப்படி சர்வதேச விண்வெளி நிலையத்தில், 18 நாட்கள் தங்கியிருந்த அக்குழு, மொத்தம் 433 மணி நேரத்தை செலவிட்ட நிலையில், தங்கள் பயணத்தை நிறைவுசெய்து பூமியை நோக்கி, டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று முன்தினம் புறப்பட்டது.

Latest Tamil News
முதலில், சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு டிராகன் விண்கலம் வெளியேறியது. தரையிறங்க வேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்தது. 12 நிமிடங்கள், எரிபொருளை செலவிட்டு சுற்றுவட்டப்பாதையில் இருந்து பூமியை நோக்கி திரும்பியது.


தொடர்ந்து, 22 மணி நேர பயணத்திற்குபின் இந்திய நேரப்படி நேற்று மாலை 3:01 மணிக்கு, டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில், 'பாராசூட்'களின் உதவியுடன் கடலில் தரையிறங்கும் 'ஸ்ப்லாஷ் டவுன்' முறையில் பத்திரமாக தரையிறங்கியது.


விண்கலம் தரையிறங்கியதும், அதில் இருந்த சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேரையும், மீட்பு கப்பல் உதவியுடன் மருத்துவ பரிசோதனைகளுக்காக மீட்புக் குழுவினர் அழைத்து சென்றனர்.
Latest Tamil News

அமெரிக்காவின் வாண்டன்பெர்க் விண்வெளி படைத்தளத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அக்குழுவினருக்கு, அங்கு மறுவாழ்வு சிகிச்சை முறைகள் ஒரு வாரத்திற்கு அளிக்கப்பட உள்ளன.


இதன் வாயிலாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்பிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்தார். இது, இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


@twitter@https://x.com/dinamalarweb/status/1945283599588319438twitter

Advertisement