கல்வி உதவித்தொகை குறித்த மோசடி அழைப்பை நம்ப வேண்டாம்: சி.இ.ஓ.,



தர்மபுரி''தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2 வாரங்களாக கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, மாணவர்களின் பெற்றோருக்கு வரும், மோசடி போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்,'' என, தர்மபுரி சி.இ.ஓ., ஜோதிசந்திரா கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 2 வாரங்களாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்புகள் வருகின்றன. அதில், உங்கள் மகள், மகன் அரசு பள்ளியில் படிப்பதால், பள்ளி கல்வித்துறை மூலம், 18,500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வந்துள்ளது.
நாளொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்வதால், மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடியவில்லை. எனவே, உங்களுடைய ஏ.டி.எம்., எண் அல்லது யு.பி.ஐ., எண் தெரிவித்தால், உடனடியாக உங்களது வங்கி கணக்கிற்கு அல்லது உங்கள் உறவினர் வங்கி கணக்கிற்கு, பணத்தை அனுப்பி விடுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும், நாங்கள், தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக, மாணவர்களின் பெற்றோரிடம் பேசி வருகின்றனர்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., எண், யு.பி.ஐ., விபரங்களை கேட்டு, பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து எந்த அழைப்பும் வராது. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, விளக்கங்கள் கேட்டு வருகிறோம். அதேபோல், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், எந்த தகவலாக இருந்தாலும், தலைமை ஆசிரியர் மூலம், மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம். தேவையற்ற மோசடி அழைப்புகளை நம்ப வேண்டாம்.
கடந்த, 3 ஆண்டில் பெற்றோரை இழந்த, 572 மாணவர்களுக்கு, தலா, 75,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.எம்.எம்.எஸ்., டிரஸ்ட் தேர்வு, என்.டி.எஸ்.இ., தமிழ் புதல்வன், மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட கல்வி உதவித்தொகைகள் பள்ளி கல்வித்துறை மூலம் நேரடியாக, மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.
இது குறித்து, பள்ளி கல்வி கல்விதுறை சார்பில், எந்தவித அழைப்பும் வராது. இது போன்ற அழைப்புகள் வந்தால், பள்ளி கல்வித்துறை அலுவலகம் மற்றும் போலீசில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement