குறுவை துவங்கியாச்சு மேய்ச்சலுக்கு தடை வந்தாச்சு

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், நெல் சாகுபடி செய்த வயல்களில், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்களை எச்சரித்து, ஆட்டோவில் ஒலிபெருக்கி பிரசாரம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூரில் சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார் நத்தம், தென்னங்குடி, பனைவெளி கிராமங்களில், விவசாயிகள், 5,000 ஏக்கரில் குறுவை சாகுபடியை துவங்கி உள்ளனர்.

வயல்களில் மாடு, ஆடுகளை பலர் மேய்ச்சலுக்கு விடுவதால், அவை நெற்பயிர்களை மேய்ந்து, வீணடித்து விடுகின்றன.

அதனால், நெல் சாகுபடி வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட தடை விதித்து, ஆட்டோவில் ஒலிப்பெருக்கி பிரசாரம் செய்கின்றனர்.

சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனைவெளி கிராமங்களில், 'கால்நடை வளர்ப்போர், நெல்சாகுபடி வயல்வெளிகளில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். மேய்ச்சலுக்கு விட்டால், மாடு ஒன்றுக்கு 2,000, ஆடு ஒன்றுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை அறிவிப்பு செய்கின்றனர்.

Advertisement