கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு

பெ.நா.பாளையம்,:கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணான் கோவில் பிரிவு உள்ளது. இங்கு பா.ஜ., முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாநில செயலர் பரமேஸ்வரன் வசிக்கிறார். அவருடன் மாமனார் ராதாகிருஷ்ணன், 92. மாமியார் சரோஜா, 82. வசித்தனர். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு வயது முதிர்வு காரணமாக ராதாகிருஷ்ணன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து பராமரித்து வந்த சரோஜாவுக்கு, இதனால் பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

கணவர் ராதாகிருஷ்ணன் மறைவு, மனைவி சரோஜாவை அதிகமாக பாதித்தது. நெடுநேரம் அழுது புலம்பியபடி இருந்தார். பின், சரோஜா திடீரென மயக்கமாகி சரிந்தார். உறவினர்கள் அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சரோஜா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று மாலை, 3:00 மணிக்கு ராதாகிருஷ்ணன் - சரோஜா ஆகியோரது உடல்கள் பெரியநாயக்கன்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

Advertisement