டெலிவரி ஊழியர் கைதால் பீட்சா வினியோகித்த போலீஸ்

அரிசோனா:அமெரிக்காவில் உணவு நிறுவன டெலிவரி ஊழியரை, வழக்கு ஒன்றில் கைது செய்த நிலையில், அவர் வினியோகிக்க வேண்டிய பீட்சாவை தாங்களாகவே கொண்டு சென்று வாடிக்கையாளரிடம் போலீசார் வழங்கினர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம், டெம்பே பகுதியைச் சேர்ந்தவர் தனியார் உணவு நிறுவன ஊழியர். இவர் சமீபத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்திருந்த பீட்சாவை வினியோகிக்க சென்றார். அப்போது போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் அவர் வினியோகிக்க வைத்திருந்த பீட்சாவை என்ன செய்வது என யோசித்த போலீசார், அதை தாங்களே எடுத்துச் சென்று, அந்த வாடிக்கையாளரிடம் வழங்க முடிவு செய்தனர். கைதான ஊழியரின் அலைபேசி செயலியில் குறிப்பிட்டிருந்த முகவரியை குறித்துக் கொண்டு, அந்த குடியிருப்புக்குச் சென்று பீட்சாவை வழங்கினர்.

போலீசார் பீட்சா கொண்டு வந்ததை பார்த்து, அதை ஆர்டர் செய்த பெண் ஆச்சரியம் அடைந்தார்.

இந்த வீடியோ காட்சிகளை டெம்பே போலீசார் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, 'பாதுகாப்போ அல்லது பீட்சா டெலிவரியோ நகரத்துக்கு 24 மணி நேரமும் சேவையாற்ற காத்திருக்கிறோம்' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement