தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்து விட்டது: சொல்கிறார் எச்.ராஜா

திருநெல்வேலி:''தமிழகத்திற்கு மத்தியமைச்சர் அமித்ஷா வந்து சென்ற பிறகு தி.மு.க., கூட்டணி கலகலத்து போய் இருக்கிறது. தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்து விட்டது,'' என, திருநெல்வேலியில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடந்த பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணியில் இருந்தது. அப்போது அந்த கட்சியை கபளீகரம் செய்து விட்டோமா. காங்கிரஸ் கட்சி தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய போது முதல்வராக இருந்த கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என கூறினார். அப்படிப்பட்ட கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. மக்கள் நல கூட்டணியை வைத்துக்கொண்டு தி.மு.க.,வை விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிக கேவலமாக பேசினர். தற்போது தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறார்கள். தி.மு.க.,வினருக்கு பயம் கப்பி கொண்டதால் உளறிக் கொண்டிருக்கின்றனர்.

குழந்தைகளை போதைக்கு அடிமை ஆக்காமல் காப்பாற்றப்பட வேண்டிய கடமையாக உள்ளது. அதனால் தி.மு.க., அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். பல்லடம் தொகுதி ம.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட நபர் உள்ளிட்டவர்கள் தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டணிக் கட்சிகளை கபளீகரம் செய்வது தி.மு.க.,வா. பா.ஜ.,வா.

டாஸ்மாக் வரி மூலம் ரூ.52 ஆயிரம் கோடியை தமிழக அரசு வருமானமாக பெறுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நிலை இல்லை. லாக்கப் மரணங்கள் தொடர்வதற்கு தி.மு.க., அரசு மமதையில் இருப்பதே காரணம். மடப்புரம் கோயில் ஊழியர் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியே வரவில்லை என்றால் இந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டிருக்கும். பல்வேறு விஷயங்களில் புரிதல் இல்லாததாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

எதிர்க்கட்சியாக இருப்பதற்கு கூட தகுதியற்ற கட்சியாக தி.மு.க., உள்ளது. சரியான வாக்காளர் பட்டியலை தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முதன்மையான பணி. நாடு முழுவதும் இதனை அவர்கள் முறையாக செய்ய வேண்டும். பா.ஜ.,சட்ட திட்டங்களில் 75 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் என்பது இல்லை. விஜய் கட்சியின் பெயரில் மட்டுமே வெற்றி உள்ளது. அவர் குழப்பமான மனநிலையில் உள்ளார். தேச விரோத சக்திகளோடு சேர வேண்டுமா அல்லது தேசத்தை காப்பாற்றும் சக்திகளோடு சேர வேண்டுமா என முடிவெடுக்கவில்லை. விஜய்க்கு கிடைக்கும் வாக்குகளை தவிர்க்கவே துணை முதல்வர் உதயநிதி நான் ஒரு கிறிஸ்தவன் என பேசினார் என்றார்.

Advertisement