புனே சொகுசு கார் விபத்து வழக்கு சிறுவனை மேஜராக கருத மறுப்பு

புனே: மஹாராஷ்டிராவின் புனேவில், சொகுசு கார் விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனை, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சட்டப்படி விசாரிக்க அனுமதி கோரி, புனே போலீசார் தாக்கல் செய்த மனுவை சிறார் நீதி வாரியம் நிராகரித்தது.

கடும் விமர்சனம்



மஹாராஷ்டிராவின் புனே கல்யாணி நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயதான சிறுவன் வேதாந்த், தன் தந்தையின், 'போர்ஷே' சொகுசு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று எதிரே வந்த பைக் மீது கடந்தாண்டு மோதினார்.

இந்த கோர விபத்தில், பைக்கில் வந்த ஐ.டி., ஊழியர்களான அனிஸ் அவதியா, அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாரணையில் சிறுவன் வேதாந்த் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் வெறும், 14 மணி நேரத்தில எளிய நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து காரைக் கொடுத்த தந்தை, சிறுவனுக்கு பதில் ஓட்டு நரை குற்றவாளியாக்க முயற்சித்த தாத்தா, மருத்துவ பரிசோதனையில் ரத்த மாதிரிகளை மாற்றிய மருத்துவர்கள், தாய் என அடுத்தடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு தற்போது 18 வயது நிரம்பிவிட்டது. எனவே, சிறார் சட்டப்படி தண்டனை இல்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சட்டப்படி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என புனே போலீசார், சிறார் நீதி வாரியத்தில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணை



இந்த விசாரணையின் போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷிஷிர் ஹிராய், ''குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ரத்த மாதிரிகளை மாற்றியது போன்ற இரண்டு குற்றங்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கத்தக்கவை.

''மேலும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கொடூரமானவை என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே சிறுவனாக அல்லாமல், பெரியவர்களுக்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்,'' என, வாரியத்திடம் முறையிட்டார்.

சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிறார் சட்டம் என்பது அவர்களின் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்காக உருவாக்கப்பட்டது. சிறுவனின் நல்வாழ்க்கையை கருத்தில் கொள்ளாமல், விசாரணை செய்வது சிறார் நீதியின் உணர்வுக்கு எதிரானது' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறார் நீதி வாரியம், 'விபத்து நடந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, 17 வயது 8 மாதங்களே ஆகியிருந்தன. எனவே, சிறார்களுக்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி சட்ட நடவடிக்கை தொடரும்' என, உத்தரவிட்டது.

Advertisement