தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி அ.தி.மு.க., ஜெயகுமார் காட்டம்

2


சென்னை: ''தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது. மக்களாட்சி நடந்தால், அமைச்சர்கள் பதில் அளிப்பர். அதிகாரிகள் ஆட்சி என்பதால், அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:



தேர்தல் வரும்போதுதான், ஸ்டாலினுக்கு மக்கள் கண்ணுக்கு தெரிவர். 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில், 'பொய்களுடன் ஸ்டாலின்' எனப் பெயர் வைத்திருக்கலாம். கடந்த 2021ல் ஊர் ஊராக சென்று, முதல்வர் மக்களை சந்தித்தார். பெட்டி வைத்து மனுக்கள் பெற்றார். ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டியை திறந்து, மனு மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். எத்தனை மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? விபரம் உண்டா?


மக்கள் நேரடியாக கோட்டையில் சந்திக்கலாம் என்றார். யாரும் சந்திக்க முடியவில்லை. தேர்தல் வர உள்ளதால், புதிது புதிதாக திட்டங்களுக்கு பெயர் சூட்டுகின்றனர். மனுக்களுக்கு தீர்வு கிடையாது. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி, அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் ஆட்சி இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.



தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, செய்தி தொடர்பாளர்களாக நியமித்து, ஸ்டாலின் அசிங்கப்படுத்தி உள்ளார். இப்படியெல்லாம் அதிகாரிகளை நியமனம் செய்தால், தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை என்ற ஒரு துறை எதற்கு? மக்களாட்சி நடந்தால், அமைச்சர்கள் பதில் அளிப்பர். அதிகாரிகள் ஆட்சி நடப்பதால், அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர்.


எமர்ஜென்சி காலத்தில், அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பர். இதற்கு அத்தாட்சியாக பி.ஆர்.ஓ.,க்கள் நியமனம். மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, இனி பி.ஆர்.ஓ., என்பர்.


பள்ளிகளில் 68,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், 'ப' வடிவில் மாணவர்களை அமர வைத்தால் போதுமா? கடைசி பெஞ்ச் மாணவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது என்ன 'கான்செப்ட்' என்று தெரியவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நீக்கிவிட்டு, வேறு யாரையாவது நியமிக்கலாம். கல்வித்துறையை இனியும் நாசமாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement