ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன்

3

சென்னை : நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாக கூறி பெற்ற ரூ.6 கோடி பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என அவர் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த நிலையில் பதிலுக்கு தனக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என ரவி மோகன் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரவி மோகன். தற்போது ‛பராசக்தி, கராத்தே பாபு' போன்ற படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரன் தாக்கல் செய்த மனு : எங்கள் நிறுவனத்தின் இரண்டு படங்களில் நடிக்க, நடிகர் ரவி மோகனுடன், 2024 செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்திற்கு ஊதியமாக, 15 கோடி ரூபாய் பேசி, 6 கோடி ரூபாய் முன்பணம் தந்தோம். ஒப்பந்தப்படி, எங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், மற்ற நிறுவன படங்களில் நடித்தார்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும், முன் பணத்தை திரும்ப தந்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், பணத்தை கொடுக்கவில்லை. அதேநேரம், சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் துவக்கி, அதன் வாயிலாக, ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்களிடம் வாங்கிய பணத்தை திரும்ப தர உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Latest Tamil News

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் நேற்று வந்தது. மனு குறித்து பதில் அளிக்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் 'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' நிறுவனம் மீது ரவி மோகன் இன்று(ஜூலை 16) வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛பாபி டச் கோல்ட் யுனிவர்சல் நிறுவனத்தின் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. 2025, ஜனவரி முதல் மார்ச் வரை 80 நாட்கள் கால்ஷீட் வழங்கியிருந்தேன். ஆனால் இதுவரை படப்பிடிப்பை அவர்கள் துவங்கவில்லை. பிறகு ஜூன் மாதமும் கால்ஷீட் ஒதுக்கினேன். அப்போதும் அவர்கள் படத்தை துவங்கவில்லை. இதனால் அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. நானும் படத்திலிருந்து விலகிவிட்டேன். என்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு அந்த நிறுவனம் ரூ.9 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Latest Tamil News

இந்த வழக்கு இன்று நீதிபதி குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் சார்பில் ஆஜரான வக்கீல், ‛‛ரவி மோகன் பணத்தை திருப்பித்தர தயாராக உள்ளார். அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பின் அந்த பணத்தை தருவதாக சொன்னார். ஆனால் 7 நாட்களில் பணத்தை திருப்பித்தர வேண்டும் என்கின்றனர்'' என வாதிட்டார்.

தயாரிப்பு தரப்பில் ஆஜரான வக்கீல், ‛இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஒப்பந்தத்தை மீறி 'பராசக்தி' படத்தில் ரவி நடிக்கிறார் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினமே தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையும் வருகிறது.

Advertisement