வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., - ஏ.சி.,யை 'சஸ்பெண்ட்' செய்ய டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., மற்றும் பாதிக்கப்பட்டோர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய உதவி கமிஷனரை, 'சஸ்பெண்ட்' செய்யும்படி, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுார் பகுதியில் உள்ள, 12 ஏக்கர் நிலம் தொடர்பாக, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த செந்தாமரை, மாற்று சமூகத்தை சேர்ந்த வீராசாமி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், நிலம் செந்தாமரைக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அந்த உத்தரவை உறுதி செய்தது.
இந்நிலையில், வேறு சமுதாயத்தை சேர்ந்த கேசவன் என்பவர், அந்த நிலத்துக்கு உரிமை கோரி, திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் செந்தாமரை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி, 2023ல் வானுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு நிலத்தை பார்வையிட சென்ற, செந்தாமரையின் உறவினரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, கடுமையாக தாக்கி, மொபைல் போனை கேசவன் பறித்துள்ளார்.
ஜாதியை சொல்லி திட்டியதாக அளித்த புகார் மீது, வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், கேசவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மீது, ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 'ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்த, கேசவன் மீது அளிக்கப்பட்ட புகார் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கோட்டக்குப்பம் சரக டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்' என, செந்தாமரை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தே.அசோக்குமார், 'டி.எஸ்.பி., உரிய விசாரணை நடத்தாமல், ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார்' என்று, தெரிவித்தார். உடன் நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்காததுடன், வன்கொடுமை தடுப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாத டி.எஸ்.பி.,யை, 'சஸ்பெண்ட்' செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
92 சவரன் திருட்டு
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜிரினா பேகம்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கணவர் இறந்து விட்ட நிலையில், 2018ல் மகள் திருமணத்திற்கு வாங்கிய, 92 சவரன் நகைகள் திருடு போய் விட்டன. இதுதொடர்பாக, சூளைமேடு போலீஸ் நிலையம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எட்டு ஆண்டுகளாக, போலீசார் தங்கள் கடமையை செய்ய தவறியதால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சபீத், ''நகையை மீட்பது தொடர்பாக, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்று தெரிவித்தார்.
வழக்கில், 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை, சூளைமேடு போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றியவர்கள் ஆஜராகினர். அப்போது நீதிபதி, 'குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக, போலீசாருக்கு அரசு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். முறையான பயிற்சி இல்லாமல், கடமையை செய்ய தவறும் போலீஸ் அதிகாரிகளை, நீதிமன்றமே வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும்' என, எச்சரித்தார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'குற்றம் நடந்த காலத்திற்கு பின், சூளைமேடில் அதிக காலம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றும் கர்ணனை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும். 2018 செப்டம்பர் முதல் தற்போது வரை பணியாற்றிய ஆய்வாளர்கள் மீது, துறை ரீதியாக டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இதேபோல, சேலம் மாவட்டம் வீராணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தவணை முறையில் வீட்டுமனை வழங்குவதாக கூறி மோசடி செய்யப்பட்டது. இது குறித்து, 2018ல் அளிக்கப்பட்ட புகாரில், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவும், நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2018ல் இருந்து தற்போது வரை, வீராணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் ஆஜராகினர். இந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு நீதிபதி உத்தரவிட்டார்.






மேலும்
-
அரசு மகப்பேறு மருத்துவமனையின் அவலம்; இதுதான் சிறந்த கட்டமைப்பா: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும்; சொல்கிறார் சீமான்
-
கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!
-
ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன்
-
கீழடி அகழாய்வு: சர்ச்சைகளின் உண்மை நிலையும் மத்திய அரசின் பங்கும்
-
நான் எடுக்கும் முடிவே இறுதியானது; இ.பி.எஸ்., திட்டவட்டம்!