மீன் உருவம் பொறித்த பாண்டியர் காலத்து 5 வகை 'எல்லாம் தலையானான்' நாணயம் தங்கம், செம்பிலானவை சேகரிப்பு

மதுரை: மதுரையில் தனியாரால் அமைக்கப்படும் பாண்டியர் அருங்காட்சியத்திற்கு நாணயங்கள் சேகரிப்பு பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 28 நாணயங்கள் சேரிக்கப்பட்டு அதுகுறித்து ஆய்வு நடந்துள்ளது.
மதுரை பாண்டிய மன்னர்களின் வரலாற்றை மீட்டெடுக்க பாண்டியநாடு அறக்கட்டளை சார்பாக பாண்டியர் அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கு தேவையான ஆயிரம் பண்டைய நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடு, ஓலைச்சுவடி, பொற்கலன்கள் போன்ற வரலாற்றுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட 28 நாணயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் வரலாற்று ஆய்வுக்குழுவின் முதன்மை ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது:
முற்கால பாண்டியர் முதல் தென்காசி பாண்டியர்கள் நாணயம் வரை சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர சேரர், சோழர் பல்லவர்கள், விஜயநகர பேரரசுகளின் நாணயங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பண்டைய நாணய ஆர்வலர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாணயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இது வரலாற்றை மீட்டெடுக்கும் புனிதப் பணியாக கருதுகிறோம். பாண்டியர் காலத்தில் நாணயங்கள் செம்பிலும், தங்கத்திலும் வெளியிடப்பட்டன. தங்க நாணயங்கள் கழஞ்சு, வராகன், காசு, பொன் என அழைக்கப்பட்டன. செப்பு நாணயங்கள் செப்புக் காசுகள் என்று அழைத்தனர். கழஞ்சு என்ற பெயர் பாண்டியப் பெருவேந்தர் காலத்துக் கல்வெட்டுகளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோணாடு கொண்டான் நாணயம், கச்சி வழங்கும் பெருமாள் நாணயம், எல்லாம் தலையானான் நாணயம், கோதண்டராமன் நாணயம், சுந்தரபாண்டியன் நாணயம், குலசேகரன் நாணயம் என்ற பெயரில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 'எல்லாம் தலையானான்' என்ற பட்டப் பெயரை முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பெற்றிருந்தார்.
இந்த 'எல்லாம் தலையானான்' நாணயம் 5 வகைகளில் காணப்படுகிறது. இந்த ஐந்து வகை நாணயங்களிலும் ஒரு பக்கம் அரசர் ஒருவர் நின்ற கோலத்தில் காணப்படுகிறார். மறு பக்கத்தில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. முதல் நாணயத்தில் எல்லாம் தலையானான் என்ற தொடர் மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது நாணயத்தில் ஒரு மீன் செங்குத்தாக பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில் எல்லாம் தலையானான் என்ற தொடர் கடிகாரச் சுற்றுமுறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாணயத்தில் இரண்டு மீன்கள் செங்குத்தாகக் காட்டப்பட்டுள்ளன. இம்மீன்களைச் சுற்றி வட்டவடிவத்தில் எல்லாம் தலையானான் என்ற தொடர் பொறிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாணயத்தில் இரண்டு மீன்கள் 'வி' போல் சாய்ந்த சிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மீன்களுக்கும் இடையில் எல்லாம் தலையானான் என்ற தொடர் காணப்படுகிறது. ஐந்தாவது நாணயத்தில் இரண்டு மீன்கள் தலைப் பகுதியில் சேர்ந்து ஒரு கூம்பு வடிவத்தில் காணப்படுகின்றன.
இவற்றிற்கு இடையே காணப்படும் இடைவெளியில் எல்லாம் தலையானான் என்ற தொடர் காணப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு
-
மனிதர்களுடன் உணவை பகிரும் உயிரினம்
-
கொசுவை கொல்லும் லேசர்!