கிணற்றில் விழுந்த கோழியை பிடிக்க முயன்ற மூதாட்டி பலி

திருச்சி:கிணற்றில் விழுந்த கோழியை மீட்க சென்ற மூதாட்டி, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நாகரத்தினம், 60. இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

அனைவரும் அவர்களின் தோட்டத்தில் விவசாய வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்களின் கோழி ஒன்று, தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து, அங்குள்ள மேட்டில் நின்றது. அதை மீட்க நாகரத்தினம் சென்றபோது, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் கூறி விட்டனர். இதனால் அவர் செல்லவில்லை.

நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கோழியை மீட்க நாகரத்தினம் கிணற்றில் இறங்கினார். அப்போது தவறி தண்ணீரில் விழுந்து, மூழ்கி இறந்தார்.

தகவலறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி, நாகரத்தினத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement