மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை:மதுரை மாநகராட்சி சொத்துவரி விதிப்பில் முறைகேடு மூலம் 200 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க, அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி அ.தி.மு.க.,கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் மேயர் மற்றும் மண்டல தலைவர்களால் பெரிய அளவில் சொத்து வரி முறைகேடு நடந்துள்ளது.
முறைகேடுகளைக் கண்டறிய ஒரு குழுவை மாநகராட்சி கமிஷனர் அமைத்தார். உண்மையில் தவறு செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இம்மோசடியால் மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளின் கம்ப்யூட்டர் யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை பில் கலெக்டர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தி, சொத்து வரி விகிதத்தை மாற்றியுள்ளனர்.வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.
புகார் அளித்த 8 மாதங்களுக்கு பின் வழக்கு பதிய, மதுரை நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 2025 ஜூன் 17ல் கமிஷனர் உத்தரவிட்டார். விசாரணையில் போலீசார் ஆர்வம் செலுத்தவில்லை. உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை இல்லை. சாதாரண நபர்களை கைது செய்தனர்.
இவ்விவகாரத்தை முறையாக விசாரிக்கத் தவறிவிட்டனர். வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.நீதிபதிகள்: மனுவில் குறிப்பிட்டுள்ள பிரச்னை மதுரையில் மட்டுமல்ல. தமிழகம் முழுதும் உள்ளது.
சி.பி.ஐ.,க்கு வழக்குகளால் பணிச்சுமை அதிகம். அனைத்து வழக்குகளையும், சி.பி.ஐ.,க்கு மாற்ற முடியாது. சி.பி.ஐ.,க்கு மாற்றினால் 10 ஆண்டுகள் கடந்தாலும் வழக்கு முடிவுக்கு வராது.
தமிழக முதல்வர் உத்தரவிட்டதால் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் மூலம் சுதந்திரமாக, நியாயமாக விசாரணை நடப்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உயர்நிலையில் உள்ளவர்கள் என்பதால், கீழ்நிலை அதிகாரி விசாரித்தால் சரியாக இருக்காது.
விசாரணை வெளிப்படையாக, சுதந்திரமாக நடைபெற, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த ஐ.பி.எஸ்., அந்தஸ்திலான அதிகாரி விசாரித்தால் தான் சரியாக இருக்கும்.
எனவே, ஒரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் அமைக்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.,மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்