ஆர்.சி.பி., மீது கிரிமினல் வழக்கு கர்நாடக அரசு அதிரடி முடிவு

பெங்களூரு: பெங்களூரில் நடந்த கூட்ட நெரிசல் பலி சம்பவத்தில், ஆர்.சி.பி., அணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல்., கோப்பையை வென்ற ஆர்.சி.பி., அணிக்கு ஜூன் 4ல் பெங்களூரில் பாராட்டு விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியாகினர்.

விசாரணை நடத்திய, கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, விசாரணை அறிக்கையை, முதல்வர் சித்தராமையாவிடம் கடந்த 11ம் தேதி சமர்ப்பித்தார்.

அதில், '11 பேர் பலியானதற்கு ஆர்.சி.பி., அணி நிர்வாகம், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டி.என்.ஏ., தனியார் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தான் நேரடி காரணம்' என, குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. 'தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்' என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆர்.சி.பி., நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி விகாஸ் குமார் விகாஸ் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்தது. மாநில அரசு தரப்பில், விகாஸ் குமார் விகாஸ் ஆர்.சி.பி., அணியின் பணியாளர் போல செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement