இடிக்கப்பட்டது சத்யஜித் ரே வீடு இல்லை: வங்கதேச அரசு

2

டாக்கா: உலக சினிமா இயக்குநர்களில் முக்கிய நபரான மறைந்த இயக்குநர் சத்யஜித் ரேவின் பூர்வீக வீடு வங்கதேசத்தில் இடிக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், அது அவரது வீடே இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் பிறந்தவர் இயக்குநர் சத்யஜித் ரே. இவரது பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட வங்க மொழி படங்கள், உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகின்றன.

சத்யஜித் ரேவின் பூர்வீக வீடு, வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ளது. சிறு வயதில் சத்யஜித் ரே இங்கு வசித்தார். இந்த வீட்டை வங்கதேச அரசு இடித்ததாக வீடியோ வெளியானது.

இந்நிலையில், மைமன்சிங்கில் இடிக்கப்பட்டது சத்யஜித் ரேவின் வீடே இல்லை, அவர் வீடு பக்கத்தில் அப்படியே உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மைமன்சிங் துணை கலெக்டர் கூறியதாவது:

சத்யஜித் ரே பூர்வீக வீடு இடிக்கப்பட்டதாக செய்தி வெளியானதும், அந்த சொத்தின் அரசு பதிவுகளை சரிபார்த்தோம். இடிக்கப்பட்ட வீடு மைமன்சிங் குழந்தைகள் அகாடமியின் அலுவலகமாக இருந்தது.

அவரது பூர்வீக வீடு, அந்த கட்டடத்திற்கு அருகில் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

Advertisement