குழந்தையின் நலனுக்காக தீர்ப்பை மாற்றலாம்: விவாகரத்து வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

1

புதுடில்லி: 'குழந்தையின் நலன் சார்ந்த விஷயத்தில் தீர்ப்பு என்பது முக்கியமல்ல' என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை மாற்றி, தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

மனு தாக்கல்



குழந்தை பராமரிப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கடந்த, 2015ல் விவாகரத்து பெற்ற அந்தப் பெண்ணின் 13 வயது மகனை, தந்தையிடம் ஒப்படைக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து அந்த பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன் விபரம்:

எங்களுக்குள், 2015ல் விவாகரத்து நடந்தது. அதன்பின் நான்கு ஆண்டுகளாக, தந்தைக்கு மகனுடன் எந்த தொடர்பும் இல்லை. 2019ல் மலேஷியாவுக்கு இடம்பெயர முடிவு செய்தேன்.

என் மகனையும் அழைத்துச் செல்ல அவனது தந்தையின் கையொப்பத்தைப் பெற முயன்றேன். அவர், கேரள குடும்பநல நீதிமன்றத்தை நாடினார். எனக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார். அப்போது மகனை மலேஷியாவிற்கு மாற்றுவது அவரது நலனுக்கு உகந்ததல்ல எனக்கூறிய உயர் நீதிமன்றம், என் மகனை தந்தையின் பராமரிப்பில் விட உத்தரவிட்டது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். 2024ல், உச்ச நீதிமன்றமும் அதையே உறுதி செய்தது. தன்னை பிரிந்திருந்ததால், மகன் உளவியல் ரீதியாக பாதிப்பட்டிருப்பதாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளேன். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தாயைப் பார்க்கக் கூடாது என்று மகனை தந்தை மிரட்டி உள்ளார். இதனால் அவனது மனநிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகம் இல்லை



வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

குழந்தையின் மனநலம் தொடர்பாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் உளவியல் ஆலோசகர் அளித்துள்ள அறிக்கை புதிய ஆதாரமாக உள்ளது.

எந்த வழக்கிலும் குழந்தைகளின் நலனையே, நீதித்துறை தன் தீர்ப்பில் மையமாக எடுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வழக்கில் தொடர்புடைய சிறுவன், தன் தந்தையை யாரோ ஒருவர் போல கருதுகிறான். அவருடன் ஓர் இரவு கூட இருக்க விரும்பவில்லை. அதே சமயம், தாயுடன் இருக்கும்போது எந்தவித பதற்றமும் இன்றி நிம்மதியாக இருப்பதை நீதிமன்றம் கண்டது.

ஒவ்வொரு வழக்கையும் அதன் தனித்துவமான உண்மைகளின் அடிப்படையில் கையாள வேண்டும். குழந்தையின் நலனை பாதிக்கும் ஒரு காரணம் இருந்தாலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், சிறுவனை தாயின் பராமரிப்பில் வளர்க்க உத்தரவிட்டனர்.

Advertisement