எங்கள் நெருக்கடிகளை சொல்கிறோம் அவமானப்படுவதாக கருதக்கூடாது திருமாவளவன் புது விளக்கம்

சென்னை: ''தி.மு.க., அல்லது அ.தி.மு.க., ஆட்சி என்ற உளவியல் தான் தமிழக மக்களிடம் உள்ளது,'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் வி.சி., தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தன் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருமாறு கமலுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
பின், திருமாவளவன் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தல் மிக கடினமாக இருக்கும் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில், தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.,வை எதிர்க்கும் சக்திகள் சிதறிக் கிடக்கின்றன. எங்கள் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முயற்சிக்கிறார்.
ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர முடியும். அ.தி.மு.க., ஆட்சியிலும் நெருக்கடி இருந்தது. அதேபோல், ஒவ்வொரு காலகட்டத்திலும் நெருக்கடிகளை சந்தித்து, வலுப்பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
எங்களது நெருக்கடிகளை பொதுவெளியில் சொல்வதால், நாங்கள் அவமானப்படுகிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்; அது உண்மையல்ல.
தி.மு.க., கூட்டணியில், கொடுத்த இடங்களில் போட்டியிடுவீர்களா என்பது யூகமான கேள்வி. வி.சி.,யும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணியை வலுப்பெறச் செய்வதும், வெற்றி பெற வைப்பதும் எங்களின் பொறுப்பு.
எங்கள் கூட்டணியில், தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும். இதுவரை நடந்ததை போல், இத்தேர்தலிலும் இருமுனை போட்டியே இருக்கும்.
தமிழகத்திலும், தேசிய அளவிலும், மூன்றாவது அணி தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை. தி.மு.க., அல்லது அ.தி.மு.க., என்று தீர்மானிக்கிற உளவியலில் தான் தமிழக மக்கள் உள்ளனர். மற்ற கட்சிகள் தனிப்பட்ட முறையில் வலுப்பெற்றாலும், இருமுனை போட்டியே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.



மேலும்
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை