ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை யாரும் நோட்டமிடவில்லை: போலீசார் விளக்கம் போலீசார் விளக்கம்
சென்னை: 'தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா வீட்டை நோட்டமிட்டவர்களுக்கு, எவ்வித உள்நோக்கமும் இல்லை' என, சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்கள்
சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டை, ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க., கொடி கட்டிய காரும் வந்துள்ளது. இதனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரி, தி.நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:
சென்னை தேனாம்பேட்டை போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகே, சந்தேகப்படும்படி சுற்றி வந்த ஆட்டோவை ஓட்டி வந்த, திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, கணேசனும், இவருக்கு தெரிந்த ராம் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர், சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருபவர்கள் என்பதும், சினிமா பிரபலங்களை சந்தித்து படம் எடுத்துக் கொள்பவர்கள் என்பதும் தெரியவந்தது.
கடந்த, 10ம் தேதி, ராமுவுக்கு தெரிந்த, கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கார்த்தி என்ற சூர்யா மற்றும் தமிழரசன் ஆகியோர் திருவொற்றியூருக்கு வந்தனர்.
அன்று மாலை, நடிகர் கிங்காங் மகளின் திருமண வரவேற்பில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர்.
திருமண நிகழ்ச்சி
ஆதவ் அர்ஜுனா அலுவலகம் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு நடிகர், நடிகையர் வருவதால், ஆறு பேரும் காலை, 11:00 மணிக்கு வந்துள்ளனர்.
நடிகர்களுடன் படங்கள் எடுத்துக்கொண்டு, மதிய உணவுக்கு பின், அதே இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல், வேறு ஏதேனும் நடிகர், நடிகையர் தென்படுகின்றனரா என, காத்திருந்துள்ளனர்.
மாலையில், நடிகர் கிங்காங் மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பெங்களூருவைச் சேர்ந்த நபர்கள் அங்கு போய் விட்டனர். மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
தி.மு.க., கொடி கட்டிய இன்னோவா கார், தி.மு.க., பொறியாளர் பிரிவு மாவட்ட செயலர் குமரேசன், 52 என்பவருக்கு சொந்தமானது என்பதும், கார் ஓட்டுநர் செந்தில், மேலாளர் அருணாசலம் ஆகியோர் இருந்ததும் இவர்கள் வழிதவறி கஸ்துாரி ரங்கன் சாலைக்கு வந்து திரும்பி சென்றதும் தெரியவந்தது.
விசாரணை முடிவில், ஆட்டோ மற்றும் காரில் வந்த நபர்கள், ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தை நோட்டமிட வரவில்லை.எவ்வித உள்நோக்கமும் இன்றி, கஸ்துாரி ரங்கன் சாலைக்கு வந்து சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால் அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை