ஐகோர்ட் உத்தரவில் ரகசிய ஓட்டெடுப்பு: பதவி இழந்தார் தி.மு.க., நகராட்சி தலைவி

தென்காசி:சங்கரன்கோவில் தி.மு.க., நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிக்கு எதிராக, பிற கவுன்சிலர்கள், கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

குரல் ஓட்டில் அவர் தோல்வியுற்றார். குரல் ஓட்டெடுப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று மீண்டும் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. நகராட்சி கமிஷனர் நாகராஜ் ஓட்டெடுப்பை நடத்தினார்.

காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக இருந்தது. 11:30 மணி வரை இரண்டு கவுன்சிலர்களுக்காக வேண்டுமென்றே காத்திருக்கிறீர்கள் எனக் கூறி, கூட்டத்திற்கு வந்த உமா மகேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரகசிய ஓட்டெடுப்பில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டு போட்டு அவரை பதவி இழக்க செய்தனர். இதில் தி.மு.க., 7, அ.தி.மு.க., 12, ம.தி.மு.க., 2, காங்., 1, சுயேச்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ., கட்சி 1 என மொத்தம் 28 கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர்.

இதனால் உமா மகேஸ்வரி பதவி இழந்தார். முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு புதிய நகராட்சி தலைவி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப் பட்டது.

Advertisement