மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக உடல்தானம் தேவை அதிகரிப்பு ... : பக்கத்து மாவட்டங்களுக்கு வழங்கி மதுரை தாராளம்

மதுரை: மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் உடற்கூறியல் பயிற்சி பெறுவதற்கான உடல்தான தேவையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட பெரிய கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான சேர்க்கை 150 ல் இருந்து 250 ஆக அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., முதலாண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல் பாடப்பிரிவு உள்ளது.

இப்பாடம் பயிலும் ஆய்வகத்தில் ஒரு டேபிளுக்கு 10 மாணவர் வீதம் ஆராய்ச்சி செய்ய பதப்படுத்த மனித உடல்கள் வைக்கப்படும். மாணவர்கள் அதிகரிக்கும் போது கூடுதல் உடல்கள் ஆய்வுக்கு தேவை. மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் தானம் பெறும் உடல்கள் பிற மருத்துவக் கல்லுாரிகளுக்கும் வழங்கப்படுவதால் தேவை அதிகமாக உள்ளது. 'கடந்த 19 மாதங்களில் 80 உடல்களை தானமாக பெற்றுள்ளோம்' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) சரவணன்.

அவர் கூறியதாவது: அடையாளம் தெரியாத, மருத்துவக் காரணங்களால் உயிரிழந்த உடல்களை, போலீசார் மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் பாதுகாக்கும்படி சொல்வர். உறவினர்கள் வராத நிலையில் எங்களிடம் ஒப்படைத்து விடுவர். அதை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி விடுவோம்.

தற்கொலை செய்த, விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுவதால் அவற்றை தானமாக வழங்க முடியாது. மருத்துவ கல்லுாரி மூலம் மருத்துவமனையில் தானமாக பெற்ற உடல்களை தென்மாவட்ட மருத்துவக் கல்லுாரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநர் அனுமதியின் பேரில் வழங்குகிறோம்.

பொதுமக்கள் சிலர் உயிருடன் இருக்கும் போதே 'இறந்தபின்' உடல்தானம் செய்வதாக ஒப்பந்தம் செய்வதுண்டு. இதற்காக மருத்துவக்கல்லுாரியின் அனாடமி துறையில் ஆதார், ரேஷன் கார்டு நகல், 3 போட்டோ, 2 அலைபேசி எண்களுடன் கடிதம் எழுதி பதிவு செய்ய வேண்டும். அவர் இறந்த பின் அனாடமி துறைக்கு தெரிவித்தால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை இலவசமாக எடுத்து வருவோம்.

இறந்தவரின் வெளியூர் உறவினர்கள் வரத்தாமதமானாலும் மார்ச்சுவரியில் தனியாக உடல்கள் பாதுகாக்கப்படும். உறவினர்கள் வந்ததும் இறுதிச்சடங்கு செய்ய இடம் ஒதுக்கப்படும். அதன்பின் உடலை ஒப்படைத்தால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒருவர் உடல்தானம் செய்யாத நிலையில் இறந்திருந்தால், குடும்பத்தினர் விரும்பினாலும் உடலை தானம் செய்யலாம். அதற்கு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., வை அணுக வேண்டும் என்றார்.

Advertisement