மேம்பால சர்வீஸ் ரோடு பணி: நுாறாண்டு மரங்களுக்கு பாதிப்பு

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பால பணியில், சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக அமெரிக்கன் கல்லுாரியில் வளர்ந்துள்ள 120 வயது மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சர்வீஸ் ரோட்டுக்காக மதுரை அமெரிக்கன் கல்லுாரி முன்புறமுள்ள காம்ப்ளக்ஸ் கடைகள் இடிக்கப்பட்டு வருகிறது. கடைகளின் பின்புறத்தில் அமெரிக்கன் கல்லுாரி காம்பவுண்ட் சுவருக்குள் வளரும் 120 வயதுடைய இரண்டு பொந்தன்புளி மரங்களை வெட்டுவதற்கும் நெடுஞ்சாலைத்துறையினர் குறித்துச் சென்றுள்ளனர்.
இவற்றை பாதுகாக்க வேண்டும் என கல்லுாரி முதல்வர் பால் ஜெயகர், தாவரவியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பொந்தன்புளி மரங்கள் மதுரையில் மிகவும் குறைவு. எங்கள் கல்லுாரியில் மட்டும் 2 மரங்கள் உள்ளன. கல்லுாரி துவங்கிய காலத்தில் நடப்பட்டு 120 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன.
கோடையில் இவற்றின் வெண்ணிற பூக்கள் பரவசமூட்டும். வவ்வால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடக்கிறது. எறும்பு, பட்டாம்பூச்சி என பல்லுயிர் சூழலுக்கு புகலிடமான இந்த மரங்களை வெட்டக்கூடாது.
சாலையை அகலப்படுத்தினாலும் இந்த மரங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாது. வெளிநாடுகளில் மரங்களை வெட்டாமல் அதற்கேற்ப திட்டமிட்டு பாலம் கட்டுகின்றனர்.
இங்கு சர்வீஸ் ரோட்டில் ஐந்தடி அகலத்தை கூட்டுவதற்காக மரங்களை வெட்ட நினைப்பது கொடுமை. இதுகுறித்து கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றனர்.
ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டும் சூழலில் ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 20 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். பல இடங்களில் அகலப்படுத்திய ரோடுகளில் வாகன 'பார்க்கிங்களாக'வே உள்ளன. அதுபோல கருதி சர்வீஸ் ரோட்டிற்குள் வரும் பழமை மரங்களை பாதுகாக்கவும் செய்யலாம்.
மேலும்
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை