மின்தடையை கண்டித்து சாலை மறியல்

நெட்டப்பாக்கம்: தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் நடத்தினர்.

ஏம்பலம் தொகுதி, கரிக்கலாம்பாக்கம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தொடர் மின் வெட்டு இருந்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கபட்டனர். இதுகுறித்து அப்பகுதிமக்கள் மின் துறை ஊழியர்களிடம் புகார் அளித்தும், அரசு மற்றும் மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியில் இருந்து நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாமல் கடுமையாக அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நுாற்றுாக்கும் மேற்பட்டோர், காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ், தெற்கு மாவட்ட தலைவர் குமரேஸ்வரன், இ.கம்யூ., ராமமூர்த்தி, சேகர் ஆகியோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் துறை உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement