கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைக்க அரசு மானியம்: விண்ணப்பம் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை அரசு மானியத்தில் பழுது பார்த்து புனரமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானிய தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் வாங்கியிருக்க கூடாது.

ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின் 5 ஆண்டிற்கு அந்த தேவாலயம் மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.

இந்த திட்டத்தின்கீழ் கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. தேவாலயங்களில் பீடம், கழிவறை, குடிநீர், சுவிசேஷ ஸ்டாண்ட், மைக்செட், ஒலிப்பெருக்கி, போன்ற தேவையான உபகரணங்கள், சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டு வரை இருப்பின் 10 லட்சம் ரூபாய் மானியத் தொகையும், 15 முதல் 20 ஆண்டு வரை 15 லட்சம் ரூபாய் மானியம், 20 ஆண்டிற்கு மேல் இருப்பின் 20 லட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விபரம் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement