தமிழ் பாரம்பரிய கலை பாடம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

நமது தற்காப்புக்கலைகளான சிலம்பம், களரி, வர்மக்கலை, வளரிக்கலை, பாரம்பரிய கலைகளான பரதம், கரகம், கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம் அழியும் நிலையில் உள்ளன.

பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்து பாடத்திட்டம் கொண்டுவர, தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் தமிழர்களின் கலைகளை கற்பிக்க பயிற்சி மையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

அரசு பிளீடர் திலக்குமார் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுவில் கோரிய நிவாரணம் நீதித்துறையின் மறு ஆய்வு வரம்பிற்குள் வராது. மனுதாரர் கொள்கை முடிவை வகுக்க உத்தரவிடக் கோருகிறார். அத்தகைய முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.

கொள்கை முடிவு தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement