'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி

சென்னை: 'ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' என, கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கத்தை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்தாலும், தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. சென்னை மாகாணமாக இருந்தபோது, 1952ல் நடந்த, முதல் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதும், கூட்டணி ஆட்சி அமையவில்லை
.
பின், 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில், கூட்டணி அமைத்து வென்ற தி.மு.க.,வும், 1977, 1980, 1984, 1991, 2001, 2011 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து வென்ற அ.தி.மு.க.,வும், தனித்தே ஆட்சி அமைத்தன.
கடந்த 2006ல் தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், பா.ம.க., தயவுடன் ஆட்சி அமைத்தது. ஆனாலும், அக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவில்லை. அக்கட்சிகளும் ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, தனிப்பெரும்பான்மை பெற்றது. தமிழக தேர்தல் வரலாறு இப்படி இருக்க, இப்போது முதல் முறையாக, சட்டசபை தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே, 'கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி தர துவங்கியுள்ளன.
'வரும் 2026 சட்டபை தேர்தலில் வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்ப திரும்ப கூறி வருகிறார். ஆனால், 'அ.தி.மு.க., தனித்தே ஆட்சி அமைக்கும்; கூட்டணியில் நான் எடுப்பதுதான் முடிவு' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விடாப்பிடியாக பேசி வருகிறார்.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படும், பா.ம.க., தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோஷத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., கூட்டணியிலும், 'ஆட்சியில் பங்கு' கோஷம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. கடந்த 6ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய, அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ் குமார், 'காங்கிரஸ் கட்சி எந்த பக்கம் போகிறதோ, அந்த கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எனவே, காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்தாக வேண்டும்' என, கூட்டணி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என, பேசத் துவங்கியுள்ளனர். இது, தி.மு.க.,வுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன?
கடந்த அக்டோபர், 27ம் தேதி, விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., தனிப் பெரும்பான்மையுடன் வெல்லும். ஆனாலும், கூட்டணியில் எந்த கட்சிகளெல்லாம் இடம்பெறுகின்றனவோ, அக்கட்சிகளையும் ஆட்சியில் சேர்த்துக் கொள்வோம்' என்றார். அதன் பின்னரே, தமிழக அரசியல் களத்தில், 'ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி' முழக்கங்கள் கேட்கத் துவங்கின.
என்ன தான் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும், தங்கள் கூட்டணியில் விஜய் இணைந்தால் தான் தி.மு.க., கூட்டணியை தேர்தலில் வீழ்த்த முடியும் என்பதால், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், காங்கிரசுடன் தான் கூட்டணி அமைக்க, விஜய் விரும்புகிறார். இதற்காக, ராகுல் வரை பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
விஜயுடன் செல்லும் வாய்ப்பும் காங்கிரசுக்கு இருப்பதைக் காட்டி, தி.மு.க., கூட்டணியில் கூடுதல் சீட் பேரம் பேசலாம் என்பதோடு, ஆட்சியில் பங்கு கோஷத்தையும் வலியுறுத்தலாம் என கணக்குப் போட்டு, காங்கிரஸ் தரப்பில் காய் நகர்த்துகின்றனர். இது தி.மு.க., தரப்புக்கும் தெளிவாக தெரிந்துள்ள நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்பதற்காகவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என, கூட்டணி கட்சிகள் பேசுகின்றன. 1980, 2011 சட்டசபை தேர்தல்களில், கூட்டணி ஆட்சிக்கு தயாராகும் வகையில் தான், அன்றைய தி.மு.க., தலைவர் கருணாநிதி தொகுதிப் பங்கீடு செய்தார். ஆனால், அதை மக்கள் ஏற்கவில்லை.
கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால், கூட்டணி ஆட்சி அமைவது சாத்தியமாகாது. விஜய், இதையெல்லாம் சொன்னாலாவது, கட்சிகள் தன்னை நோக்கி வரும் என எதிர்பார்த்து சொன்னார்; ஆனால், அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்லத் தயாரில்லை' என்கின்றனர்.













மேலும்
-
10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!
-
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
-
மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்தது; இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்!
-
டில்லியில் 20, பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
-
சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'எய்ம் பார் சேவா' நடத்தும் இசை நிகழ்ச்சி