'ஓரணியில் தமிழகம்' என்று வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டும் நாடகம் அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு
மதுரை: ''நான்கு ஆண்டு கால ஆட்சி தோல்வியை மறைக்க 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில் வீடுகளில் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டும் நாடகத்தை ஆளுங்கட்சி அரங்கேற்றி வருகிறது,'' என, மதுரையில் அ.தி.மு.க., மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
அவர் நேற்று கூறியதாவது: தி.மு.க., ஆட்சி விளம்பர வெளிச்சத்தில் நடக்கிறது. தினமும் புதுப்புது பெயரில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் ராக்கெட் வேகத்தில் மறைந்து விடுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி தற்போது அத்திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டமாக அறிவிக்கிறார்.
ஆனால் 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் 110 விதியின் கீழ் 1,740 அறிவிப்புகள் வெளியிட்டு 1,658 அதாவது 97 சதவீதம் அறிவிப்புகள் செயலாக்கப்பட்டன.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் 300 திட்டங்களை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவித்து 266 பணிகள் முடியும் நிலையில், ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அதற்கும் தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்.
கோவையில் ரூ. 750 கோடியில் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ.479 கோடியில் ஆத்துப்பாலம், உக்கடம் மேம்பாலம், மதுரையில் ரூ.ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அரசு மருத்துவமனையில் ரூ.350 கோடியிலான திட்டப்பணிகள், ரூ.28 கோடியில் ஒபுளாபடித்துறை பாலம் என அ.தி.மு.க., திட்டங்களை தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டியதை பட்டியலிடலாம்.
இதுபோல் தி.மு.க., கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கு காஸ் மானியம், மாணவர்களுக்கு கல்விக் கடன், நீட் நுழைவுத் தேர்வு ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது என எதுவும் நடக்கவில்லை. ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மடைமாற்றம் செய்யவே ஓரணியில் தமிழகம் என்ற உறுப்பினர் சேர்க்கையை துவக்கியுள்ளனர். இதில் வீட்டு உரிமையாளர்களுக்கே தெரியாமல் வாசலில் ஸ்டிக்கர் ஒட்டும் நாடகம் நடத்துகின்றனர். ஆட்சி முடியும் நிலையிலும் ஸ்டிக்கர் ஒட்டுவதை தி.மு.க., இன்னும் கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு