ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு மதுரை மேயரை விசாரிக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'கறார்'

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்து வரி முறைகேடு குறித்து தி.மு.க., கண்துடைப்பு விசாரணை நடத்துகிறது; மேயரையும் விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.

மதுரையில் அவர் நேற்று கூறியதாவது: மாநகராட்சி சொத்து வரி வருவாயை தங்களது பாக்கெட்டில் போட்டுக் கொண்ட ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், உடந்தையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தியது. ரூ.150 கோடி வரை முறைகேடு என மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம் அ.தி.மு.க., மனு அளித்து விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டது.

சி.பி.ஐ., விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு முதல்நாள் மண்டலத் தலைவர்கள், நிலைக் குழு தலைவர்களை ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் முறைகேடு குறித்து உரிய முறையில் விசாரணை நடக்கவில்லை. பில் கலெக்டர்கள், தற்காலிக பணியாளர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை அதிகாரிகள், ஆளுங்கட்சியினரை காப்பாற்றுவதற்காக கண்துடைப்பு நாடகம் போல் உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவுப்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நீதிமன்றம் மேற்பார்வையில் தென் மண்டல ஐ.ஜி., தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 24ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்த முறைகேட்டில் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் பணியாற்றிய புள்ளி விபர குறிப்பாளர் (ஏ.பி.,) ரவி மூளையாக செயல்பட்டார் என தொடர்ந்து குற்றம்சாட்டினோம். அவர் மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மணியின் கணவர். ரவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இந்த முறைகேடு மேயருக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும். மேயர் தான் மாநகராட்சிக்கு எல்லாம். அவரையும் போலீசார் விசாரிக்க வேண்டும். மண்டலத் தலைவர்கள் பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளனர். அது குறித்து கணக்கெடுத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

உடன் மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்ளிட்ட கவுன்சிலர்கள் இருந்தனர்.

Advertisement