போலி சிம்கார்டு பெற்ற வழக்கில் மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் தண்டனை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

3


சிவகங்கை: போலி சிம்கார்டு வாங்கியது உள்ளிட்ட 8 பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.


கேரளா மாநிலம் பெரிங்கோட்டுகரா கிராமத்தை சேர்ந்தவர் ரூபேஷ் 64. இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க தலைவராக இருந்தார். கடந்த 2015 ம் ஆண்டு கோயம்புத்துார் மாவட்டம், கருமத்தம்பட்டியில் கியூ பிரிவு போலீசார் இவரையும், இவரது மனைவி சியானா உட்பட 5 பேர்களை கைது செய்தனர். இவர்களை திருச்சூர் அருகே வையூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ரூபேஷ் 2015 க்கு முன் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இடையன்வலசையை சேர்ந்த நேரு என்பவரிடம், அவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, விசாரணைக்கு தேவைப்படும் என சொல்லி நேருவின் ரேஷன் கார்டை வாங்கி, கன்னியாகுமரி சென்றுவிட்டார்.

அங்கு நேருவின் பெயரில் உள்ள ரேஷன் கார்டை அடையாளமாக காண்பித்து சிம்கார்டு வாங்கி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்திற்காக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2015 நவ.,17 அன்று சிவகங்கை கியூ பிரிவு போலீசார் போலி ஆவணங்களை காண்பித்து சிம்கார்டு வாங்கியதாக வழக்கு பதிந்து, ரூபேஷை கைது செய்தனர்.


இவ்வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக திருச்சூர் சிறையில் இருந்த ரூபேஷ்-யை கேரளா போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிவகங்கைக்கு அழைத்து வந்தனர்.

போலி ஆவணம் மூலம் சிம்கார்டு வாங்கியது உட்பட 8 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ரூபேஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அழகர்சாமி ஆஜரானார். மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் மீது கோயம்புத்துார், மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement