உலக விளையாட்டு செய்திகள்

'காஸ்ட்லீ' வீராங்கனை
லண்டன்: கனடா கால்பந்து வீராங்கனை ஒலிவியா ஸ்மித் 20, லிவர்பூல் அணியில் இருந்து ஆர்சனல் அணிக்கு ரூ. 11.54 கோடிக்கு ஒப்பந்தமானார். கால்பந்து அரங்கில் அதிக விலைக்கு 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்ட வீராங்கனையானார். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் நவோமி கிர்மா, ரூ. 9.47 கோடிக்கு சான் டியாகோ வேவ் (அமெரிக்கா) அணியில் இருந்து செல்சி (இங்கிலாந்து) அணிக்கு வாங்கப்பட்டிருந்தார்.
அரையிறுதியில் இங்கிலாந்து
ஜூரிச்: சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்கள் 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடன், இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலை வகித்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இங்கிலாந்து 3-2 என வென்றது.
ஆஸ்திரேலியா அபாரம்
புர்னோ: செக்குடியரசில் நடக்கும் பெண்களுக்கான (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து காலிறுதியில் ஹங்கேரி, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 82-76 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
பைனலில் ஜெர்மனி--பிரான்ஸ்
லில்லி: பிரான்சில் நடக்கும் ஆண்கள் (18 வயது) 'யூரோ' கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஜெர்மனி அணி 5-3 என பெல்ஜியத்தை வென்றது. மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் அணி 3-2 என ஸ்பெயினை வீழ்த்தியது. பைனலில் ஜெர்மனி, பிரான்ஸ் மோதுகின்றன.
எக்ஸ்டிராஸ்
* பஹ்ரைனில், உலக '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் பங்கஜ் அத்வானி, கமல் சாவ்லா, பராஸ் குப்தா, புஷ்பேந்தர் சிங், மல்கீத் சிங், பிரிஜேஷ் தமனி, ஆதித்யா மேத்தா, மனன் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* ஐதராபாத்தில், வரும் ஆக. 3-10ல் பெண்களுக்கான உலக கோப்பை கபடி 2வது சீசன் நடக்கிறது. இதன் முதல் சீசன், 2012ல் பாட்னாவில் நடந்தது. இதில் இந்திய அணி கோப்பை வென்றிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பின், ஐதராபாத்தில் சர்வதேச கபடி தொடர் நடக்கவுள்ளது. கடைசியாக 2005ல் ஆசிய சாம்பியன்ஷிப் நடந்தது.
* சீனாவில் நடக்கும் பெண்கள் ஆசிய கோப்பை கூடைப்பந்து 'டிவிசன்-பி' காலிறுதியில் இந்திய அணி 76-93 என தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.
* ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடக்கவுள்ள துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டிகளை (ஜூலை 24, 29, ஆக. 3, 5, 8, 11) காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். இம்மைதானத்தில் 22,500 இருக்கைகள் உள்ளன.
* இத்தாலியில் நடந்த உலக யூத் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் (அணி) 19வது சீசனில், 31 வயதுக்குட்பட்ட அணிகள் பிரிவில் 3வது இடம் பிடித்த இந்தியா வெண்கலம் வென்றது. 16 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதி 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி, பிரான்சிடம் தோல்வியடைந்து 4வது இடம் பிடித்தது.