'ஆன்லைன்' தரிசன மோசடி: குருவாயூர் கோவில் எச்சரிக்கை

குருவாயூர்: 'தரிசனம் ஏற்பாடு செய்யவோ, காணிக்கைகள் வசூலிக்கவோ எந்த நிறுவனத்திற்கும், தனிநபருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை' என, குருவாயூர் தேவஸ்தானம் பக்தர்களை உஷார்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதைப் பயன்படுத்தி, தரிசனம், காணிக்கை என பக்தர்களிடம் நுாதன மோசடிகளும் நடக்கின்றன. தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக, 'வாட்ஸாப்'பில் வந்த தகவலை நம்பி பணம் செலுத்தி ஏமாந்ததாக பக்தர் ஒருவர் சமீபத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, குருவாயூர் தேவஸ்தான தலைவர் வி.கே.விஜயன், கோவிலின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தரிசனம் ஏற்பாடு செய்யவோ அல்லது காணிக்கைகளுக்கு பணம் வசூலிக்கவோ, எந்த தனியார் நிறுவனத்தையும் தேவஸ்தானம் அங்கீகரிக்கவில்லை. 'பேஸ்புக், வாட்ஸாப்' போன்ற தளங்களில் வரும் போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.

'இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டால், அதிகாரிகளிடம் தெரிவிக்கவும். பக்தர்கள் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement