'பூத்' கமிட்டி உண்மை சரிபார்ப்பு; பா.ஜ.,வில் பணிகள் சுறுசுறுப்பு

சென்னை : சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், தங்கள் கட்சியினர் அமைத்துள்ள, 'பூத்' கமிட்டியில், 12 உறுப்பினர்கள் உள்ளனரா என்பதை, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சரிபார்த்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. இதனால் தி.மு.க.,வினர், 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், மக்களை சந்தித்து தங்கள் கட்சியில் உறுப்பினராக சேர்த்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என, தேர்தல் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில், கடந்த லோக்சபா தேர்தலுக்காக, மாநிலம் முழுதும் அமைக்கப்பட்ட, 50,000 பூத் கமிட்டியை சரிபார்க்கும் பணியில், பா.ஜ., தலைமை ஈடுபட்டுள்ளது. அதன்படி, தொகுதிவாரியாக சென்று, ஒவ்வொரு பூத்திற்கும், பா.ஜ.,வினர் அமைத்துள்ள பூத் கமிட்டியில், 12 பேர் உள்ளனரா, அவர்கள் அனைவரும் கட்சியின் உறுப்பினர்களா என்பதை சரிபார்க்கும் பணியில், மாநில நிர்வாகிகளே நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், வார்டு வாரியாக மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்பது, மத்திய அரசின் திட்டங்களில், பயனாளிகளாக சேர்ப்பது, பூத் கமிட்டியில் கட்சியின் தீவிர விசுவாசிகளை சேர்ப்பது, பூத் கமிட்டி இல்லாத இடங்களில், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளில், பா.ஜ.,வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.