கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க மற்றும் அறங்காவலர்கள், கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன் மனுதாக்கல் செய்தார். பாகுபாடின்றி குறிப்பிட்ட பிரிவு மக்கள் உள்பட அனைவரும் வழிபட அனுமதிக்கக்கோரி மாரிமுத்து என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வித்யா, கோகுல்ராஜ் ஆஜராகினர்.
அறக்கட்டளை தரப்பில்,'கோயிலில் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை,' எனவும், மாரிமுத்து தரப்பில்,' கோயிலில் குறிப்பிட்ட சமூக மக்களை அனுமதிப்பதில்லை,' எனவும் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் தரப்பில், 'கோயில் 2018 முதல் மூடப்பட்டுள்ளது. திருவிழா நடத்தவில்லை. பூஜை மட்டும் நடைபெறுகிறது. ஜாதி பதட்டம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கோயில் மூடப்பட்டுள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கலெக்டரின் பதில் கண்டனத்திற்குரியது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் ஒரு பொது கோயிலை ஆண்டு கணக்கில் மூடி வைத்திருப்பது சரியல்ல.
பிரச்னை ஏற்படும் எனக்கூறி தனது கடமையிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அச்சுறுத்தல் இருந்தால், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி கையாள வேண்டியது கலெக்டரின் கடமை.
போலீசாரின் செயல்பாடும் சரியாக இல்லை. அமைதியை நிலை நாட்ட ஒரே வழி கோயிலுக்குள் யாரையும் நுழைய விடாமல் இருப்பதே என போலீசார் கருதுகின்றனர். இது தவறானது.
கோயிலுக்குள் அனைவரையும் அனுமதிப்பதை தடுப்பது அமைதியை நிலை நாட்டுவதற்கான வழியல்ல.
உரிமைகள் பாதுகாக்கப்படுவது, சட்டத்தை மீறுவோரை உரிய முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை. எதிர்ப்பவர்கள், எதிர்ப்பை சந்திப்பவர்களை சமமாக கருத முடியாது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் ஜாதியின் பெயரில் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. பக்தர்களிடையே பாகுபாட்டை சட்டம் அனுமதிக்கவில்லை. கடவுள் எந்த ஒரு ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. கடவுள் பாகுபாடு காட்டுவதில்லை. மனிதர்கள் மட்டுமே பாகுபாடுகளுடன் செயல்படுகின்றனர்.
கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அனைவரும் வழிபட அனுமதிப்பது, ஜாதி அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் கண்டதேவி கோயில் வழக்கு. ஜாதி பதட்டம் காரணமாக கண்டதேவி கோயிலில் 17 ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அனைத்து சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைவரின் பங்களிப்புடன் திருவிழா அமைதியாக நடந்தது. அதுபோல் இங்கும் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கோயிலை நிர்வகிப்பது யார், அனைத்து சமூகத்தினரும் வழிபட அனுமதிக்கப்படுகிறார்களா, அரசு மேற்பார்வையில் ஒருங்கிணைந்த வழிபாட்டுக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்பது குறித்து அறநிலையத்துறையும், 2018 முதல் கோயில் மூடப்பட்டிருப்பது ஏன், போலீஸ் பாதுகாப்புடன் வழிபாட்டை அனுமதிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, வழிபாட்டை மீட்டெடுக்க, சமத்துவத்தை உறுதிப்படுத்த எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து கலெக்டர், சட்டம்- ஒழுங்கு நிலைமை, வழிபாடு நடத்த போதிய பாதுகாப்பு வழங்க முடியுமா குறித்து எஸ்.பி., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு பொதுக் கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் யாரும் தடுக்க முடியாது. இதில் யாராவது பிரச்னை உருவாக்க நினைத்தால், ஜாதி அடிப்படையில் மரியாதை கோர முயன்றால் அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எதிர்கொள்ள நேரிடும்.
இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






மேலும்
-
உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்
-
ரூ.1 கோடி 'டிஜிட்டல்' கைது மோசடி; முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
-
இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா