ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்

சென்னை: 'ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு வினியோக பணியாளர்களுக்கு, இனி கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.


ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணியருக்கான குடிநீர், உணவு, குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், தரமற்ற பொருட்களாக இருப்பதாகவும் பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



ரயில்வேக்கு சொந்தமான இடங்களிலும், ரயில்களிலும் பயணியருக்கான பொருட்களை விற்பனை செய்வோருக்கு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், இனி கட்டாயமாக கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை வழங்க வேண்டும்.


அதில், பணியாளர் பெயர், ஆதார் எண், ஒப்பந்ததாரரின் பெயர் உள்ளிட்ட அடிப்படை விபரங்கள் இருக்க வேண்டும்.


அதுபோல், ரயில் நிலைய மேலாளர் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளின் கையெழுத்தும் இருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல், பொருட்களை விற்பனை செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement