இயந்திர நடவு மானியம் ரூ.4,000 விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்?

சென்னை: இயந்திர நடவுக்கான மானிய தொகை, 4,000 ரூபாயை இன்னும் வழங்காததால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் குறுவை பருவ நெல் சாகுபடி நடக்கிறது.


இப்பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள் உள்ளிட்டவை, மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும், 60 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.


இதே காலகட்டத்தில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சாகுபடியிலும், விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர்.


குறுவை தொகுப்புபோல தங்களுக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அந்த மாவட்டங்களின் விவசாயிகளும் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று, நடப்பாண்டு முதல் டெல்டா அல்லாத, 29 மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.


இத்திட்டத்தின் கீழ் நெல் சாகுபடிக்கு, இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு, 4,000 ரூபாயும், விதை நெல், 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவண்ணா மலை, வேலுார், காஞ்சி புரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்வமுடன் விவசாயிகள் சாகுபடி செய்துஉள்ளனர்.



வேளாண் அலுவலர்களை அணுகி, தங்களுக்கு திட்டத்தின் சலுகைககளை வழங்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இயந்திர நடவுக்கான மானியம் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.


இதுகுறித்து, வேளாண் துறை இணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது: வேளாண் அலுவலர்கள் பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே, மானிய தொகை விடுவிக்கப்படும். 10 ஆண்டுகளுக்குள் அறிமுகம் செய்யப்பட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்க வேண்டும்.


மேலும், 15 முதல் 20 நாட்கள் ஆன நாற்றுக்களை மட்டுமே இயந்திர நடவு செய்ய வேண்டும் என, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவற்றை முழுமையாக ஆராய்ந்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து, மானியத்தை வழங்குவதற்கு காலதாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement