'வரி ரீபண்ட் தயார், லிங்க் இதோ...' போலி மெயில் குறித்து எச்சரிக்கை

புதுடில்லி:'நீங்கள் கட்டிய வரியில் இவ்வளவு தொகை ரீபண்ட் கிடைக்கும், கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து விபரங்களை பதிவு செய்யுங்க, உங்க வங்கிக் கணக்கில் பணம் வரும்' - இப்படி வரும் இ - மெயில்கள் குறித்து கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

பி.ஐ.பி., எனும் 'பிரஸ் இன்பர்மேஷன் பீரோ' அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வருமான வரித்துறை அனுப்புவதாக கூறி, மோசடி மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து வரி செலுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் வரும் தகவல் பரிமாற்றத்தை மட்டுமே நம்ப வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிர்வதோ கூடாது. மின்னஞ்சல், குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள் வாயிலாக, இந்த மோசடிகள் நடந்து வருகின்றன.

தேவையற்ற தகவல் தொடர்புகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வருமான வரித்துறை அல்லது எந்தவொரு சட்டப்பூர்வ நிதி நிறுவனமும், மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாக வங்கி கணக்கு விபரங்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டு எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் கேட்காது.

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் அல்லது தகவல்களை பெறும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வருமான வரி வலைதளமான, https://incometaxindia.gov.in/pages/report-phishing.aspx முகவரியில் உடனடியாக புகாரளிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

Advertisement