காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு


கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. மேலும், காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாகவும் தண்ணீர் பாசனத்திற்கு செல்கிறது.

இந்நிலையில், நேற்று மாயனுார் காவிரி கதவணையை பார்வையிட்ட, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் செல்கிறது. வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில், காவிரி-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில், கால்வாய்கள் புதிதாக வெட்டும் பணி பல இடங்களில் நடக்கிறது. ஆனால், மந்தமாக நடந்து வருகிறது.

மேலும், கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக வரும் பாசன நீர், கடைமடை வரை வருவதில் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துரிதப்படுத்த வேண்டும். மேலும், கட்டளை மேட்டு வாய்க்கால் வரும் தண்ணீர் கொண்டு பாசன வசதி பெறும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் துார்வாரி அதில் தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை நீர்பாசனத்துறை நீர்வாகம் எடுக்க வேண்டும். இதன் மூலம், 1,500 ஏக்கர் சாகுபடி நிலம் பயன்பெறும் என, மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement