குடிநீர் பிரச்னையை கண்டுக்கொள்ளாது அதிகாரிகள் மெத்தனம் ....: நீண்ட துாரம் சென்று குடிநீர் எடுக்கும் அவலம்

கோடையில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாகி தண்ணீர் தேவை அதிகரிக்கும். அப்போது நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீர் பிரச்னையால் மக்கள் இன்னலுக்கு ஆளாவர். கோடை முடிந்தும், பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தது வரை, மோட்டார் பழுது, குழாய்கள் உடைப்பு உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் சரி செய்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தினர்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் ஊராட்சி செயலர்கள் மூலம் அதிகாரிகள் நேரடியாக கவனித்து வருகின்றனர். மின் மோட்டார் பழுது, குழாய்கள் உடைப்பு உள்ளிட்டவைகளை சரி செய்ய வேண்டி புகார் தெரிவித்தால் அதிகாரிகள் கண்டும் காணாமல் மெத்தனமாக இருக்கின்றனர்.

சப்ளை இல்லாமல், நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க, ஏற்கனவே வைகை, தாமிரபரணி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெளியூர் குடிநீரை உள்ளூர் தண்ணீருடன் கலந்து கொடுப்பதால் சுவை இன்றி, சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக காரியாபட்டி சொக்கனேந்தலில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு மேலாகியும், பைப் லைன் போடாமல் கிடப்பில் போட்டனர். பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதே போல் வி.நாங்கூரில் தாமிரபரணி குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. உள்ளூர் குடிநீர் சப்ளை செய்யும் மின் மோட்டார் பழுதாகி 10 நாட்களுக்கு மேலாகியும் பழுது நீக்காமல் கிடப்பில் உள்ளது.

தற்போது மக்கள் நீண்ட துாரம் நடந்து சென்று வைரவன் கோயிலில் உள்ள மோட்டாரில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். எஸ்.தோப்பூரில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால், 2 வாரத்திற்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இது போன்ற நிலைமை இருந்து வருகிறது.

சீரமைத்து சீராக குடிநீர் வழங்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மெத்தன போக்கை கைவிட்டு, சீராக குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement