சட்டவிரோதமாக தங்க திருநங்கையாக நடித்த வங்கதேச நபர் சிக்கினார்

போபால்: மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இதற்காக அவர் திருநங்கையாக நடித்தது தற்போது தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள புத்வாரா பகுதியில் நேஹா என்ற திருநங்கை வசித்து வந்தார்.

20 ஆண்டுகள்



சமீப காலமாக, இவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால், அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி போலீசார் நேஹாவை கண்காணித்து வந்தனர்.

நேஹா, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்கியுள்ள நேஹாவை, வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:

கைது செய்யப்பட்ட நேஹா, வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருடைய பெயர் அப்துல் கலாம் என்பதும் தெரியவந்தது.

தன், 10வது வயதில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். முதலில், மஹாராஷ்டிராவின் மும்பையில் 20 ஆண்டுகள் வசித்துள்ளார்.

அதன்பின் மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு குடிபெயர்ந்தார். தன்னை ஒரு திருநங்கையாக அவர் அடையாளம் காட்டி வந்தார்.

உள்ளூர் ஏஜென்ட்கள் உதவியுடன் ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக பெற்று வசித்து வந்துள்ளார்.

விசாரணை



இதற்கிடையே, நேஹா பல முறை வங்கதேசத்திற்கு சென்றதும் கண்டறியப்பட்டுள்ளது. இவரது செயல்பாடுகள் குறித்து விசாரித்து வருகிறோம். பிறப்பிலேயே அவர் திருநங்கையா அல்லது திருநங்கையாக நடிக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

சட்டவிரோதமாக ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை நேஹாவுக்கு வழங்கிய ஏஜென்ட்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement