ஹிமாச்சலில் ஒரே பெண்ணை மணந்த அண்ணன், தம்பி

13

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி, ஒரே பெண்ணை, இரு சகோதரர்கள் திருமணம் செய்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் ஹட்டி பழங்குடியின சமூகத்தினர், வித்தியாசமான முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

இங்கு, ஒரு பெண் இரண்டு ஆண்களை திருமணம் செய்யும் பழக்கம், ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இங்குள்ள சிர்மவுர் மாவட்டம் குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுஹான் என்ற இளம்பெண், பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற இரு சகோதரர்களை கரம்பிடித்துள்ளார்.

இரு வீட்டார் சம்மதத்துடன், குறிப்பாக மணப்பெண்ணின் சம்மதத்துடனும் இந்த திருமணம் நடந்துள்ளது.

சகோதரர்களின் ஷில்லாய் கிராமத்தில், கடந்த 12 - 14ம் தேதி வரை மூன்று நாட்களாக தடபுடலாக நடந்த திருமணத்தில், ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

மணமகனில் ஒருவரான பிரதீப் அரசு பணியில் இருக்கிறார். அவரது சகோதரர் கபில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

ஹட்டி இனத்தில் இதுபோல் ஒரே பெண்ணை இருவர் திருமணம் செய்யும் முறையை, ஜோடிதரன் அல்லது திரவுபதி பிரதா என பாரம்பரியமாக அழைக்கின்றனர். இந்த வழக்கம் சிர்மவுர் மாவட்டத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் காணப்படுகிறது.

மலைப்பகுதிகளில் அதிகம் வாழும் ஹட்டி இன மக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டது.

மூதாதையரின் சொத்து பிரிந்து போகக் கூடாது என்பதற்காகவும், எந்தப் பெண்ணும் கணவனை இழந்தவர்கள் என்ற நிலைக்கு ஆளாவதை தடுக்கவும், இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் நடைமுறை புழக்கத்தில் இருப்பதாக ஹட்டி சமூகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement