சொகுசு படகில் தீ 5 பயணியர் பலி

மானடோ: இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட பயணியர் சென்ற சொகுசு படகு நடுக்கடலில் தீ பற்றியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் 17,000 தீவுகள் உள்ளன. இதற்கிடையே பயணிக்க படகு போக்குவரத்து தான் ஒரே வழி.

இந்நிலையில், சுலாவேசி தீவின் தலாவுத்தில் இருந்து அந்த தீவின் தலைநகர் மனாடோவுக்கு நேற்று பயணியர் படகு புறப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

நடுக்கடலில் சென்றபோது இந்தப் படகில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ படகு முழுதும் வேகமாக பரவியது; கரும்புகையும் வெளியேறியது.

இது குறித்து அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளில் மீட்புப் பணி உதவிக்காக வந்தனர்.

தீ பற்றிய படகில் இருந்து பலர் உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட்டுகளுடன் கடலில் குதித்து தத்தளித்து வந்தனர். மேலும் பலர் படகின் முனையில் காத்திருந்தனர்.

இதில், 284 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கர்ப்பிணி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தீப்பிடித்த படகில், மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படையினர்.

Advertisement